ரிஷி சுனக்கிற்கு அவசரமாக அனுப்பட்ட கடிதம்!
"அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்க வேண்டும்" என்று பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான ஜெய்ன் மாலிக், பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக்கிற்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(strict eligibility rules) படி பிரித்தானியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் 2ஆம் ஆண்டு இறுதி வரை பள்ளியில் உணவை இலவசமாகப் பெறலாம், ஆனால் அதன் பிறகு அது குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறப்பட்டது.
வறுமை
இதனால் பல குழந்தைகள் பள்ளி உணவை இலவசமாகப் பெறமுடியாமல் வறுமையின் காரணமாக உணவின்றி தவித்து வருகின்றனர்.
எனவே இந்தக் கடுமையான சட்டங்களை மாற்றியமைத்து அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளி உணவை இலவசமாக வழங்கவேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமரான ரிஷி சுனக் வரும் நவம்பர் 17ம் திகதி நடைபெறவுள்ள வரவு- செலவு தாக்கலில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிவருகின்றனர்.
ஜெய்ன் மாலிக்
இந்நிலையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான ஜெய்ன் மாலிக், "பிரிட்டனின் 'கடுமையான தகுதி விதிகள் (strict eligibility rules)' காரணமாக வறுமையினால் உணவின்றி தவிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளி உணவை இலவசமாக அளிக்கும் வகையில் நல்ல திட்டத்தை இந்த வரவு செலவு தாக்கலில் கொண்டு வர வேண்டும்" என்று பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெய்ன் மாலிக் , "பசி என்பது சமூகத்தின் கொடிய நோய். குழந்தைகள் வறுமையால் உணவின்றி தவிக்கிறார்கள்.
இதனால் அவர்களுக்குக் கவனக்குறைவு ஏற்படுகிறது. சில நேரங்களில் குழந்தைகள் உணவகங்களில் உணவுகளைத் திருடும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
ஏனெனில் அவர்கள் மிகுந்த பசியுடன் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் உணவு வாங்கப் பணம் இல்லை. இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
இந்த நிலை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும், நான் அதை நேரில் பார்த்திருக்கிறேன். பிராட்ஃபோர்டில் வளர்ந்ததால், நான் இலவச பள்ளி உணவை மட்டுமே நம்பியிருந்தேன்.
இந்தக் கடிதத்தை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் எந்தவொரு குழந்தையும் இந்தப் பசியையும் களங்கத்தையும் மீண்டும் அனுபவிக்க மாட்டார்கள் என்பதை நாம் அனைவராலும் உறுதிப்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.
மேலும், பிரதமர் என்ற முறையில் இந்த நிலைமையை மாற்ற உங்களுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தயவுசெய்து மனசாட்சியுடன் செயல்பட்டு நவம்பர் 17ஆம் திகதி உங்கள் வரவு-செலவு திட்டத்தில் வறுமையில் வாடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச பள்ளி உணவை வழங்க உறுதியளிக்க வேண்டும். அரசியல் பிரச்சினை மற்றும் கொள்கைகளினால் எந்தக் குழந்தையும் உணவின்றி தவிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.