சவேந்திர சில்வா உட்பட நால்வருக்கு பிரித்தானியாவால் விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை! வரவேற்கும் சிறீதரன்
சவேந்திர சில்வா உட்பட நால்வருக்கு பிரித்தானியா அதிரடி தடை விதித்துள்ளமையை தான் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்த நபர்களுக்கு இங்கிலாந்து நேற்றையதினம்(24) தடை விதித்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக செயற்பட்ட துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இங்கிலாந்தால் தடைசெய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு நீதி
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரித்தானிய அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது.
இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடாத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரித்தானிய அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதிகோரும் பயணத்தில் தமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத்தமிழர்கள் பார்க்கிறார்கள்.
இந்தத் தடை அறிவிப்பு
எண்பது வருடங்களுக்கு மேலாக கேட்பாரற்று படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு தமக்கான நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத்தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri
