பிரித்தானியாவில் வானதி சீனிவாசனுடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு
இந்திய (India) - ஈழத் தமிழர் உறவுப் பாலம் எனும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது, கடந்த 17ஆம் திகதி மாலை 6 மணியளவில் லண்டனில் (London) உள்ள கிறிஸ்ரல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழாவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டாடுவதற்கான சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமான, வானதி சீனிவாசன் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள முக்கியமான பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்கள், சட்டத்துறை சார்ந்தவர்கள், பொறியியலார்கள், தொழில்சார் வல்லுநர்கள், வர்த்தக பிரமுகர்கள், நீண்டகால தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக பிரதிநிதிகள் ஆகியோரும் பிரித்தானியா தமிழர் பேரவையுடன் இணைந்து சிறப்பித்துள்ளார்கள்.
பிரித்தானிய தமிழர் பேரவை
இதன்போது, வானதி சீனிவாசனுக்கான சிறப்புக் காணொளி ஒன்று திரையிடப்பட்டுள்ளது. இக்காணொளியில், வானதி சீனிவாசன், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதையும், இவருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் இடையேயான நீண்ட கால உறவு குறித்தும் விவரணப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளர் கவுன்சிலர் சர்மிளா வரதராஜ் உரையாற்றியுள்ளார்.
மிக குறைந்த வயதில் வொன்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், “பல்லின பாரம்பரியத்தினை அடிப்படையாக கொண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி அதிகாரங்களை பகிர்ந்து சனநாயக நாடாளுமன்ற “ஒன்றிய” அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
மாறாக இலங்கை தன்னை தானே சிதைத்து கொள்ளும் ஒற்றை இன, ஒற்றை மத, ஒற்றை மொழி நாடாக சம உரிமைகளை மறுதலித்து, தொடரும் வன்முறை சுழற்சி, படுகொலைகள் என 30 ஆண்டு கால யுத்தத்தினை தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்டது.
இலங்கையின் தற்போதைய நிலை
சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பு அதனை வங்குரோத்து (Bankruptcy) நிலைமைக்கு இட்டு சென்றுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை, ஐ.நா. மனித உரிமைகள் கழகத்துடனும் அதன் உறுப்பு நாடுகளுடனும் நீண்ட காலமாக செயல்பட்டு வருவதுடன் ஐ.நா.வில் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளை தற்போது இருக்கும் நிலைக்கு முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) உறுப்பு நாடுகள், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை’ (SLAP) அமைத்து சாட்சியங்களை திரட்டி வருகின்றது.
குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கு சரியான ஆதாரங்கள் தேவை. BTF ஒரு குற்றவியல் விசாரணை பொறிமுறையை நிறுவுவதற்கான அடுத்த படிகளில் உறுப்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா அண்மையில் விடுத்த அறிக்கையில், "தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்" என குறிப்பிட்டிருந்தது.
ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில், சுதந்திரமாக வாழக் கூடிய எதிர்காலம் உருவாகும் வரை BTF உலகெங்கும் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்” என தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பல்வேறுபட்ட நிகழ்வுகளும், உரைகளும், ஈழத்தமிழர்களுடனான கலந்துரையாடல்களும் இதன்போது இடம்பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |