உகண்டா நாட்டிற்கு அடித்த அதிஷ்டம்:கண்டுபிடிக்கப்பட்டுள்ள 12 ட்ரில்லியன் டொலர் பெறுமதியான தங்கம்
அண்மைய காலத்தில் நடத்திய கனிய வள ஆராய்ச்சியில் 12 ட்ரில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 31 மில்லியன் தொன் தங்கத்தை கொண்டுள்ள கனிய மண் வளத்தை கண்டுபிடித்துள்ளதாக உகண்டா அரசாங்கம் அறிவித்துள்ளது.
தங்க மண்
இந்த தங்கத்தை அகழ்ந்து அதனை பிரித்து எடுப்பதற்கு அதிகளவிலான முதலீட்டாளர்களை கவர்வது அவசியம் எனவும் உகண்டா கூறியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பூகோளவியல், புவி இரசாயன மற்றும் ஆராய்ச்சிகளின் பின்னர் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வான் பரப்பின் ஊடான தேடுதல்களுக்கு அமைய இந்த தங்க வளத்தை கண்டுபிடித்துள்ளதாக உகண்டா எரிசக்தி மற்றும் கனிய வள அமைச்சின் பேச்சாளர் சொலமன் முய்டா தெரிவித்துள்ளார்.
31 மில்லியன் தொன் தங்க மண்ணை சுத்திகரித்தால், மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 158 தொன் தங்கத்தை பிரித்து எடுக்கலாம். பல கனிய வள படிமங்கள் கென்யா நாட்டின் எல்லையில் நாட்டின் வடகீழ் பகுதியில் அமைந்துள்ள கரமோஜா பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனை தவிர நாட்டின் கிழக்கு, மத்திய, மேற்கு பிரதேசங்களில் அதிகளவிலான தங்க கனிய மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் சொலமன் முய்டா கூறியுள்ளார்.
அதிகளவிலான கனிய வளங்களை கொண்டு உகண்டா நாடு, ஆபிரிக்க நாடுகளில் உள்ள வறிய நாடுகளில் ஒன்று.