திருடர்கள் இருக்கும் வரை இலங்கையர்கள் டொலர்களை அனுப்ப மாட்டார்கள்
அரசாங்கம் என்ன கூறினாலும் நாட்டில் இன்னும் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை என்பதால், கடன்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையான ஆட்சி
தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வு கடனை பெறுவது என்றால், அதனை பெற்றுக்கொள்ள நாட்டில் நம்பிக்கையான ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும்.
கடனை திரும்ப செலுத்துவதை ஒத்திவைத்து, வெளிநாடுகளில் தொழில் புரிவோரிடம் இருந்து அதிகளவில் டொலர்களை பெற வேண்டும்.
வெளிநாடுகளில் தொழில் புரிவோரிடம் டொலர்களை பெற வேண்டிய தேவை இருந்தாலும் நாட்டில் திருடர்கள் இருக்கும் வரை மக்கள் டொலர்களை அனுப்பி வைப்பதை தவிர்ப்பார்கள்.
600 மில்லின் 200 மில்லியனாக குறைந்தது
கடந்த காலங்களில் மாதாந்தம் 600 மில்லியன் டொலர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிவோரிடம் இருந்து கிடைத்தது. எனினும் தற்போது அந்த வருமானம் 200 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.
இதனால், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நம்பிக்கையான அரசாங்கத்தை கோருகின்றனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.