உடுவில் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் திடீர் குழப்பம்!
உடுவில் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஆசனப் பிரச்சினையால் குழப்பநிலை உருவாகியுள்ளது.
உடுவில் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணை தலைவருமான வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் இன்று(16) காலை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், உடுவில் பிரதேசத்தின் அபிவிருத்தி, குடிநீர், கல்வி , விவசாயம், சுகாதாரம், சுற்றுச்சூழல், வெள்ள நீர் அபாயம், உடுவில் பிரதேசத்தில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் உடுவில் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஷ், யாழ்.மாவட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் உடுவில் பிரதேச திணைக்களங்களின் அதிகாரிகள், உடுவில் பிரதேச கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள், உடுவில் பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு வருகை தந்த உடுவில் பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷ், “தெற்கில் இடம்பெறும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அந்த பகுதியின் தவிசாளருக்கு மேல் இருக்கையில் ஆசனம் வழங்கப்படுகிறது.
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சட்டம் தெற்கிற்கு ஒன்று வடக்கிற்கு ஒன்றாக இருக்க முடியாது எனக்கு உரிய ஆசனம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, பதில் வழங்கிய அபிவிருத்தி குழு தலைவர் பவானந்த ராஜா, “இங்கு எந்த அரசியலும் இல்லை, அபிவிருத்தி தான் உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன், வாருங்கள்” என்றார்.
இதனையடுத்து, கீழ் வரிசையில் அமர்ந்திருந்த தவிசாளர் எழுந்து சென்று அபிவிருத்தி குழு தலைவர் பவானந்த ராஜாவுக்கு கைகொடுத்து மேல் இருக்கையில் அமர்ந்தார்.














