உதயங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய உறவினரும், முன்னாள் ரஷ்ய தூதுவருமான உதயங்க வீரதுங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளது.
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய முறையில் 8 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதனால் நாட்டுக்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரையில் வழக்கினை ஒத்தி வைப்பதாக கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் பசான் அமரதுங்க அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயங்க அந்நிய செலாவணியை நாட்டுக்கு கொண்டு வரும் நபர் எனவும் அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தற்காலிக அடிப்படையில் உதயங்க வீரதுங்க வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.