கோட்டாபய இல்லை என்றால் ஆட்சி விடுதலைப் புலிகளிடம்! ராஜபக்சர்களின் நெருங்கிய உறவினர் தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இல்லை என்றால் நாடு விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தான் இருந்திருக்கும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொட நீதவானால் இன்றையதினம்(17) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட வீரதுங்க, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“நீங்கள் ராஜபக்சவின் ஆதரவாளராக இருந்தால் பேருந்தில் பயணிக்கும் போது கூட கவனமாக பயணியுங்கள். ஒருவேளை, யாருடைய காலையேனும் தவறுதலாக மிதித்து விட்டால் கூட நீங்களும் சிறைக்கு செல்ல நேரிடலாம்.
அரசாங்கத்தின் தவறு
தற்போது, கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் ஜனாதிபதியிடம் எதிர்பார்ப்பது, பொருளாதார வளர்ச்சிக்கான செயற்பாடுகளையே ஆகும்.
மக்கள் ஏனைய ஆட்சியாளர்களை நிராகரித்து, அநுரகுமார திஸாநாயக்கவை தேர்ந்தெடுத்தது அவர்களின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியை பார்ப்பதற்கே ஆகும்.
மாறாக பேரை வாவிகளை சுத்தம் செய்வதையோ முச்சக்கர வண்டி வைத்திருக்கும் சகோதரர்களின் அலங்காரப் பொருட்களை பறிப்பதையோ மக்கள் எதிர்பார்க்கவில்லை.
வடக்கில் தமிழ் மக்கள் அநுரவிற்கு நம்பிக்கையோடு வாக்களித்தனர். கடந்த 16 வருடங்களாக சிறையில் தவிக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளை அநுர அரசாங்கம் விடுவிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் வாக்களித்தனர்.
ஊழலற்ற ராஜபக்சர்கள்
அவர்கள் இனவாதிகள் அல்ல. அவர்களில் ஒருவரோடு நான் சிறையில் இருந்தேன். இனவாதி என்றால் என் கழுத்தை அவர் நெரித்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை.
அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதை அவர்கள் செய்தார்கள். ஆனால், 16 வருடங்களாக சிறையில் தவிக்கும் அவர்கள் இனவாதிகள் அல்ல. அவர்களை விடுதலை செய்யுங்கள்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றவாளி என முடிந்தால் நிரூபியுங்கள். அவர் எந்தவொரு ஊழலையும் இதுவரை செய்யவில்லை. அவரின் அருமையை நாட்டு மக்கள் மிக விரைவில் உணர்ந்துக் கொள்வார்கள்.
அவர் இல்லையெனில், நாங்கள் விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தான் இருந்திருப்போம், அதேபோல, மகிந்த ராஜபக்ச என்பவர் பயமறியாத ஒருவர் ” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |