ஜனாதிபதி- பிமலிடமும் வாக்குமூலம் பெறவேண்டும்! உதய கம்மன்பில காட்டம்
சுங்கத்தில் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொல்களன்கள் தொடர்பில் இலஞ்ச,ஊழல் ஆணைக்குழுவில் என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்தது போல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,அமைச்சர் பிமல் ரத்நாயக்க,பிரதியமைச்சர் மற்றும் முன்னாள் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவிலி அருக்கொட ஆகியோரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலஞ்ச,ஊழல் ஆணைக்குழுவில் நேற்றையதினம்(9) வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்குமூலம்
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அரசாங்கத்தின் மாபெரும் ஊழலான கொல்களன் விடுவிப்பு தொடர்பில் 9 மாதங்களின் பின்னர் விசாரணைகள் ஆரம்பித்தமை தொடர்பில் சந்தோசப்படுகிறேன்.
இந்த கொல்களன்களில் ஆயுதம்,போதை பொருள்,தரமற்ற மருந்துகள் இல்லை என அன்று சுங்கத்தின் ஊகப் பேச்சாளர் அருக்கொட தெரிவித்திருந்தார்.ஆனாலும் சம்பத் மனம்பேரியின் போதைப் பொருள் கொல்களன் பிடிப்பட்டது.
விசாரணை
இது தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில்,கொல்களன்கள் நெருக்கடியால் இந்த 323 கொல்களன்கள் விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஆணைக்குழுவிடம் தெரிவித்தோம்.
எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை இலஞ்ச,ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கும் போது செய்திகள் பிரசுரிப்பதற்காக ஊடக அறிக்கை வெளியிடப்படுகிறது.
அதே போல அரசின் உறுப்பினர்களை அழைக்கும் போதும் ஊடக அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.




