இலங்கையின் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் ஆதரவு - பிரதமருடன் உயர்மட்டக் குழு பேச்சு
இலங்கையின் தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சித்துறையை வலுப்படுத்துவதுடன், எதிர்கால ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் நேற்று (24.09.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் வளர்ந்துவரும் கைத்தொழில்களுக்குத் தேவையான திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதே இந்தப் பேச்சின் பிரதான நோக்கமாகும்.
முறையான கட்டமைப்பை அறிமுகப்படுத்தல்
தற்போதைய அரசால் முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்புகள் குறித்து விளக்கிய பிரதமர், தொழிற்கல்விக்கான முறையான கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை நவீனமயப்படுத்தவும், இளைஞர்கள் இரு சந்தைகளையும் வெற்றிகொள்ளத் தேவையான முதலீடுகளைச் செய்யவும் அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசு முன்னெடுத்துவரும் கல்வி மற்றும் தொழிற்துறை வேலைத்திட்டங்களைப் பாராட்டிய ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், இலங்கையின் தொழிற்கல்வித் துறையின் அபிவிருத்திக்காக முதலீடுகளைச் செய்வதற்கும் தமது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் விருப்பம் தெரிவித்தனர்.
முதலீட்டு வாய்ப்புகளில் கவனம்
இரு நாடுகளுக்கும் இடையிலான திறன் விருத்தி, பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பில் கருத்துப் பரிமாறிய பிரதமர், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாயத் துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்துமாறும் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய இராச்சியத்தின் உயர்நிலைக் குழுவில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதியின் தனிப்பட்ட அலுவலகத்தின் (முதலீடு) தலைவர் மஹ்மூத் ஜசீம் அப்துல்லா அல் அலி, AYAT குழுமத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி நசார் அலி யஸ்லாம், HSH Real Estate நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சயீத் அல் ஹினாய், Green River LLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இமாத் அபேத் அல் ஹாதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மறுபுறம், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தித் துபாயில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலெக்ஸி குணசேகர, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam