கொழும்பில் திட்டமிட்டபடி யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி
புதிய இணைப்பு
இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யுவன் லோங் டிரைவ் (U1 LONG DRIVE) இசை நிகழ்ச்சி திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் Aaraa Entertainment வழங்கும் யுவன் லோங் டிரைவ் (U1 LONG DRIVE) இசை நிகழ்ச்சி தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் சகோதரியுமான பாடகி பவதாரிணி இலங்கையில் உயிரிழந்திருந்தார். இவர் புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், சகோதரியின் இழப்பினை தொடர்ந்து இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யுவன் லோங் டிரைவ் (U1 LONG DRIVE) இசை நிகழ்ச்சியின் திகதியில் மாற்றம் ஏற்படலாமென தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், திட்டமிட்ட திகதியில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படும் என யுவன்சங்கர் ராஜா உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, இசை நிகழ்ச்சிக்கான டிக்கட்டுக்கள் 65 வீதம் விற்பனையாகியுள்ளதாகவும், எஞ்சியுள்ள டிக்கட்டுக்கள் இன்று முதல் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாகவும் Aaraa Entertainment பிரதானி தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யுவன் லோங் டிரைவ் (U1 LONG DRIVE) இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா கொழும்பை வந்தடைந்துள்ளார்.
கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று அதிகாலை (05.02.2024) அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்வதற்காக யுவன்சங்கர் ராஜா இலங்கையை வந்தடைந்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாயத்த கலந்துரையாடல்
இந்நிலையில் யுவன் லோங் டிரைவ்வினுடைய முன்னாயத்த கலந்துரையாடல்கள் இன்று மாலை கொழும்பு தாமரைக்கோபுர அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள யுவன் லோங் டிரைவ் நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
Aaraa Entertainment வழங்கும் யுவன் சங்கர் ராஜாவின் குறித்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய பாடகர்களான ஹரிச்சரன், என்ரியா, பிரேம்ஜி, திவாகர், சாம்விஷால், குக்சார்,சௌந்தர்யா, கௌதம், எம்.சி.சனா ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |