இந்தியாவிற்கு பயணத்தடை விதித்தது அமெரிக்கா! செவ்வாய்க்கிழமை முதல் அமுல்
இந்தியாவில் கோவிட் - 19 தொற்று மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு பயண தடை விதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவு துறையின் பயண ஆலோசனை பட்டியலில் இந்தியா ஏற்கனவே 4 ஆம் நிலை கீழ் உள்ளது.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு பயண தடை விதிக்க அமெரிக்காவின் பிடைன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், ஐக்கிய அமெரிக்க குடிமக்களுக்கு இந்த கொள்கை பொருந்தாது என்று பிடைன் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட பிற நபர்களும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
சர்வதேச பயணிகளுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் நுழையும் எவரும் கோவிட் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்கள் தடுப்பூசி போடப்படாவிட்டால் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இதேவேளை, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆலோசனையின் பேரில் பயண தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகையின் ஊடகசெயலாளர் தெரிவித்துள்ளார்.