இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை
இலங்கைக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு, தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்க வெளியுறவு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை நாட்டிற்கான தனது பயண ஆலோசனையை 9 ஆம் திகதி புதுப்பித்துள்ளது.
இந்த ஆலோசனைக்கான முக்கிய காரணங்களாக அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் ஆகியவை தொடர்பில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
பயண ஆலோசனை
பயண ஆலோசனையின் நிலை மாறவில்லை என்றாலும், பிற ஆபத்து தொடர்பான விடயங்கள் தொடர்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை தொடர்பாக எந்த நேரத்திலும் போராட்டங்கள் ஏற்படலாம் என அமெரிக்க வெளியுறவு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த போராட்டங்கள் உடனடி எச்சரிக்கை இல்லாமல் வன்முறையாக மாறக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இதுபோன்ற போராட்டங்கள் போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்கக்கூடும். இந்த போராட்டங்கள் அமைதியானதாக இருந்தாலும், அனைத்து கூட்டங்கள் மற்றும் போராட்டங்களிலிருந்தும் விலகி இருக்குமாறு சுற்றுலாப் பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல்கள்
இலங்கையில் முன்னறிவிப்பு அல்லது எச்சரிக்கை இல்லாமல் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருப்பதால், பயங்கரவாத தாக்குதல்களுக்கான சாத்தியமான இலக்குகளில் சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள், ஹோட்டல்கள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவை அடங்கும்.
சுற்றுலா தலங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இலங்கையின் சுமார் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்நாட்டுப் போரிலிருந்து எஞ்சியிருக்கும் கண்ணிவெடிகளால் மாசுபட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
பெரும்பாலான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் சில பகுதிகள் ஆபத்தானவை என்றும் அது கூறுகிறது.
வடக்கு மாகாணத்தின் வடக்கு மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அதிகமாக உள்ளன, அவை அடர்ந்த காடுகள் மற்றும் கடினமான நிலப்பரப்பு என கூறுப்படுகின்றது.



