தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: எதிர்ப்பு நடவடிக்கையில் பெரும்பான்மையினர்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது நாட்டின் பல பாகங்களில் நடைப்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தடுக்கும் வகையில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் சில பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை
திருகோணமலை சிவன் கோவிலடியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று (19.09.2023) சிவன்கோவில் முன்றலில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் செல்வராசா கஜேந்திரன், “நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று அதனை மறுத்து மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதலானது சமூகங்களுக்கு இடையில் இன விரிசலை ஏற்படுத்த இந்த அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒன்று” என கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த நினைவுகூரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் திருகோணமலை வாழ் மக்கள் ஒன்றிணைந்து சுடர் ஏற்றி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
யாழ் பல்கலைக்கழகம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் இன்றும் (19.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கலைப்பீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சி.சிந்துஜன் நினைவுதின உரையினை முன்வைத்திருந்ததோடு, நினைவேந்தல்கள் மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - தீபன்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் திலீபனின் நினைவேந்தலை தடுக்க தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிலும் நீதவான் நீதிமன்றிலும் பொலிஸாரால் இன்று (19.09.2023) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவேந்தல் ஊர்தி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தினை நோக்கி வந்துள்ள வேளை இந்த வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸார், முள்ளியவளை பொலிஸார், ஒட்டுசுட்டான் பொலிஸார், முல்லைத்தீவு பொலிஸார் ஆகிய நான்கு பிரிவுகளிலும் திலீபனின் நினைவு தினத்தினை நினைவிற்கொள்ளவிடாது தடைசெய்யகோரி இந்த வழங்கினை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கினை பொருத்தமற்ற வழக்காக எண்ணி நீதிமன்றினால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
செய்தி - கீதன்