சீரற்ற காலநிலை : மரங்கள் விழுந்து மூவர் பரிதாப மரணம்
சீரற்ற காலநிலை நிலை காரணமாக புத்தளம் - மாரவில மற்றும் மாதம்பைப் பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாராவில - பிலாகமுல்ல பிரதேசத்தில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் , நாத்தாண்டிய - உடுவல வீதியின் முட்டிபெதிவில பகுதியைச் சேர்ந்த யடவரகே தொன் ஹன்சி இஷாரா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்னர்.
உயிரிழந்த குறித்த பெண் திருமணமான ஒரு குழந்தையின் தாயாவார்.
இதேவேளை, மாதம்பை குளியாபிட்டிய வீதியின் சுதுவெல்ல பிரதேசத்தில் மரமொன்று வீழ்ந்ததில் வீதியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
தும்லசூரிய - உடலவெல பகுதியைச் சேர்ந்த நிசன்சலா சரோஜனி (வயது 38) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாரவில மற்றும் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலாங்கொடையில் ஒருவர் உயிரிழப்பு
இதேவேளை பலாங்கொடை, ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, ராசகல - ஹெரமிட்டிகல 54 ஆம் பிரிவைச் சேர்ந்த 44 வயதுடைய த.சுப்பிரமணியம் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |