வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் இரண்டு நேருக்குநேர் மோதி விபத்து: 26 வயது இளைஞர் பலி
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரூக்சைட் சந்தி - ஹைபொரஸ்ட் பிரதான வீதியின் சில்வர்கண்டி தோட்ட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் ஒருவருக்குக் காலில் முறிவு ஏற்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹைபொரஸ்ட் மாகுடுகலை தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இராகலையிலிருந்து புரூக்சைட் சந்தி ஊடாக மாகுடுகலை தோட்டத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
இந்தநிலையில் இவர்கள் சில்வர்கண்டி தோட்டத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் ஹைபொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலையை நோக்கிப் பயணித்த பார ஊர்தியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பார ஊர்தியில் மோதுண்ட நிலையில் வீசி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயமடைந்த இளைஞர்களை சில்வர்கண்டி தோட்ட மக்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் விபரம்
மேலும், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற இளைஞர் காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மாகுடுகலையை சேர்ந்த 26 வயதுடைய ஞானபீட சமன்குமார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் பார ஊர்தி சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பார
ஊர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



