மற்றுமொரு இ.போ.ச பேருந்து சாரதியும் நடத்துனரும் அதிரடியாக பணிநீக்கம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பொலன்னறுவை டிப்போவில் கடமையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சாரதி மற்றும் நடத்துனர் ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகந்தையில் இருந்து கல்கந்த வரை இயக்க திட்டமிடப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் வெலிகந்த டிப்போவின் ஓய்வறையில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்தத சம்பவம் நேற்று பதிவாகியிருந்தது.
பணிநீக்கம்
இந்நிலையில் கடமை நேரத்தில் மதுபோதையில் கடமைகளை புறக்கணித்ததாகக் கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பாகவே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதி மக்கள் நேற்று (08) பிற்பகலில் சம்பந்தப்பட்ட பேருந்தின் சாரதியும் நடத்துனரும் வெலிகந்த போக்குவரத்து சபையின் ஓய்வறையில் மதுபோதையில் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வெலிகந்த பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.
சம்பவ இடத்தில் நடத்துனர் ஏற்கனவே மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், சாரதி தப்பி ஓடிவிட்டதாகவும் தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை டிப்போ அதிகாரிகள் வெலிகந்த பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
விசாரணைகள்
விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் சாரதி மற்றும் நடத்துனர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை டிப்போவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வெலிகந்த பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த பேருந்தானது கல்கந்த பகுதிக்குச் செல்லும் ஒரே பேருந்து என்றும், பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகள் குழு அத்தருணத்தில் பேருந்தில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சாரதி மற்றும் நடத்துனர் இன்றி பேருந்து சேவையை இயக்க முடியாத நிலை உருவானதால், சிரமங்களை எதிர்கொண்ட பயணிகளின் நலன் கருதி வெலிகந்த பொலிஸார், பொலிஸ் ஜீப்பில் போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.