பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றிய இரு கப்பல்கள் கடலில்:இறக்குவதற்கு டொலர் இல்லை
பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் சில தினங்களாக ஏற்றி வந்த பொருட்களை இறக்காமல் கடலில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய ஒருங்கிணைந்த தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித (Ananada Palitha) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
40 ஆயிரம் மொற்றி தொன் டீசலை ஏற்றிய கப்பல் கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கைக்கு வந்தது. டீசலின் மாதிரியும் எடுக்கப்பட்டு விட்டது. 7 தினங்கள் கடந்து விட்டன. இன்னும் டீசலை இறக்க முடியவில்லை. 40 ஆயிரம் மெற்றி தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல், டிசம்பர் 28 ஆம் திகதி கொழும்பு வந்தது.
அதிலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அனைத்தும் முடிந்துள்ளது. 5 நாட்களாக அதில் இருக்கும் பெட்ரோலை இறக்க முடியவில்லை. இந்த கப்பல்களுக்கு 52 மில்லியன் டொலர்களை செலுத்தி, அவற்றில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலை இறக்க வேண்டும்.
பணத்தை செலுத்த முடியாத நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. தயவு செய்து 52 மில்லியன் டொலர்களை செலுத்தி, இலங்கை வந்துள்ள இந்த எரிபொருளை இறக்குங்கள்.
இந்த இரண்டு கப்பல்களில் இருக்கும் எரிபொருளை உடனடியாக இறக்கவில்லை என்றால், நாட்டில் எரிபொருளுக்கான பெரும் நெருக்கடி ஏற்படும் எனவும் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.