யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருவருக்குப் பேராசிரியர் நியமனம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் மேலும் இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பகிரங்க விளம்பரத்துக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்த யாழ். போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் உளநலப் பேராசியராகவும், திறமை அடிப்படையிலான உள்ளகப் பதவியுயர்வுக்காக விண்ணப்பித்திருந்த இரசாயனவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசலிங்கம் சசிகேஸ் இரசாயனவியலில் பேராசிரியராகவும் பதவி வழங்கப்படுவதற்கே பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று 29 ஆம் திகதி புதன்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபங்களுக்கமைவான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்த கலாநிதி க.சசிகேஸ், உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் ஆகியோரின் பதவியுயர்வுக் குறிப்புகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, பேரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றும் கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் 2021.01.15 முதல் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் முதல் தொகுதி மாணவர்களில் ஒருவராகத் தமிழ் விசேட கற்கை நெறியில் கல்வி கற்று விசேட இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் முது தத்துவமாணி (M.Phil), கலாநிதிப் (Ph.D) பட்டங்களையும் பெற்றார். இப்பல்கலைக்கழகத்தில் மொழித்துறையில் தமிழ் விரிவுரையாளராக நியமனம் பெற்ற அவர் தற்போது அத்துறையின் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.
அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பட்ட மேற்படிப்புகள் பிரிவின் இணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். தனது கல்விப் பணியோடு இணைந்த வகையில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளதோடு பல நூல்களைத் தொகுத்துமிருக்கின்றார். தேசிய, சர்வதேச ஆய்வு இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.
இந்நிலையில், பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற சின்னத்தம்பி சந்திரசேகரம் அவர்களுக்கு கல்விச் சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகள் : ருசாத்




