கிளிநொச்சியில் குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு நீதிமன்றம் தண்டப் பணம் விதிப்பு
கிளிநொச்சி - கட்டைக்காடு பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மற்றும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகளுக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா கடத்திய ஒருவரையும் அதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இருவருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுள்ளன. மேற்படி வழக்கானது இன்றையதினம் (22-11-2023) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுகளுக்குரிய அதிகபட்ச தண்டனை
கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.M.M சஹாப்தீன், முன்னிலையில் வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த இருவருக்கும் குற்றங்கள் எதுவும் இல்லை என்பதை கவனத்தில் கொண்டதுடன், குற்றச்சாட்டுகளுக்குரிய அதிகபட்ச தண்டனையாக முதலாம் எதிரிக்கு ஐம்பது ஐம்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சாதாரண சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாவது எதிரிக்கு எதிராக
சாட்டப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா
தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் தலா ஆறு மாத கால சாதாரண சிறை
தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றச்சாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு, பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யுமாறும் மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |