பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள சென்ற இரண்டு பேரை காணவில்லை
இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் 22 வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் 5 வது நாள் நிகழ்வுகளுக்கு பின்னர், இலங்கை வீராங்கனை ஒருவரும், உயர் அதிகாரி ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.
திங்கள் கிழமை நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து பெண் ஜூடோ வீரங்கனையும் அணியின் முகாமையாளரும், இலங்கை அணி முகாமில் இருந்து காணாமல் போயுள்ளனர்.
விளையாட்டு வீரர்களில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ள அதிகாரி
இவர்கள் காணாமல் போனமை குறித்து இலங்கை அணியின் நிர்வாகிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். பெர்மிங்ஹாம் நகர பொலிஸார் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அணிகளின் வீரர்கள் காணாமல் போவதை தடுப்பதற்காக இலங்கை வீரர்களின் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக இலங்கை அணிகள் அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜூடோ அணியின் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களுடன் 110 விளையாட்டு வீரர்கள், 51 அதிகாரிகள் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள சென்றுள்ளனர். இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 180 நாள் விசா வழங்கப்பட்டுள்ளது.