பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய இருவர் - துப்பாக்கி மற்றும் 9 தோட்டாக்கள் மீட்பு
இலங்கையின் தம்புத்தேகம - ராஜாங்கனை வீதி, 03ஆம் மைல் கல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பியோடிய இரு சந்தேகநபர்கள் விட்டுச் சென்ற ரிவோல்வர் துப்பாக்கி மற்றும் 9 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
நிகவரட்டிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பியோட்டம்
இதன்போது, மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரிடம் ரிவோல்வர் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வாகனத்தைக் கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

மற்றைய நபர் பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றி தப்ப முயன்றபோது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவரும் தப்பியோடியுள்ளார்.
மேலதிக விசாரணை
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் ஒரு ரிவோல்வர் துப்பாக்கி, மேலும் 5 தோட்டாக்கள் மற்றும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தப்பியோடிய இரு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்காக தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.