அமெரிக்காவில் இரு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்து
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் ஹம்டன் நகருக்கு மேலே ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய ரக ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
இவ்வாறு விபத்துக்குள்ளான இரண்டு ஹெலிகொப்டர்களிலும் தலா ஒரு விமானி மட்டுமே இருந்துள்ளார். மோதிய வேகத்தில் ஒரு ஹெலிகொப்டர் தீப்பிடித்து எரிந்தவாறே தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 'Enstrom 280C' மற்றும் 'Enstrom F-28A' ஆகிய இரு ஹெலிகொப்டர்கள் மோதிக்கொண்டதை உறுதி செய்துள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, விபத்திற்கான காரணம் குறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வாஷிங்டனில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று பயணிகள் விமானத்துடன் மோதி 67 பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறாத நிலையில், தற்போது நியூ ஜெர்சியில் நிகழ்ந்துள்ள இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.