முல்லைத்தீவு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அரச உத்தியோகத்தர்கள் கைது
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் பணிபுரியும் இரு அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்ததாவது, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இலஞ்சம் கோரல்
அந்த தொழிலதிபர், மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை துவைத்து சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ் மார்ச் மாதத்திற்கான கட்டண காசோலையை விடுவிக்க வேண்டுமென கோரியிருந்த நிலையில், அதற்காக ரூ.30,000 இலஞ்சம் கோரப்பட்டு பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதன்படி, மருத்துவமனையின் கணக்காளர் சண்முகராச பிரதீபன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் காசிப்பிள்ளை கந்தீபன் ஆகியோர் 18.04.2026 அன்று கைது செய்யப்பட்டனர்.

பின்னர், 19.04.2026 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களை 29.04.2026 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, சந்தேக நபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.