காணாமல்போன இரு பிரித்தானிய பிரஜைகள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உக்ரையில் தன்னார்வப் பணியைச் மேற்கொண்டிருந்த 28 மற்றும் 48 வயதுடைய இரு ஆண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இறுதியாக குறித்த இரு பிரித்தானிய பிரஜைகளும் வெள்ளிக்கிழமை சோலேடார் நகருக்குச் சென்றதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிரமடையும் போர்
சமீப நாட்களில் அங்கு சண்டை தீவிரமாக உள்ளதாகவும், அன்று முதல் அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
"உக்ரைனில் காணாமல் போன இரண்டு பிரித்தானிய ஆண்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதாக" உக்ரைன் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை காணாமல் போன இருவரையும் கண்டுபிடிக்க உதவும் எந்தவிதமான தகவல்களையும் வழங்கமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேலும், உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையிலான போர் 11வது மாதமாக தொடர்வதால், தற்போது நடைபெற்று வரும் பல்வேறு நகரங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக உக்ரைனுக்கான அனைத்து பயணங்களுக்கும் எதிராக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு மேற்கொள்ளும் பயணங்கள் "உயிர்க்கு உண்மையான ஆபத்து" இருப்பதாகக் கூறுகிறது,
இன்னும் உக்ரைனில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உக்ரைனில் பிரித்தானியர்கள் காணாமல் போவது அல்லது பிடிபட்டது போன்ற பல வழக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த செப்டம்பரில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் 10 கைதிகளை பரிமாறிக் கொண்டதாக சவுதி அரேபியா கூறியதை அடுத்து, ரஷ்ய ஆதரவுப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பிரித்தானிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.