வான் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட கஞ்சாவுடன் இருவர் கைது
வான் ஒன்றில் மறைத்து எடுத்த செல்லப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியிலிருந்து மட்டக்களப்பிற்கு வான் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அறிவியல்நகர் பகுதியில் கிளிநொச்சி குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாரட்ணம் ஜெசிந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 10 கிலோ 845 கிராம் எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த வாகனத்தையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் சாந்தபுரம்
பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மற்றையவர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சான்று பொருட்களுடன், கைது செய்த நபர்களையும் இன்று பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளிற்கான 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாகக் கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

