கிண்ணியாவில் இருவேறு இடங்களில் அதிரடிச் சோதனை: ஐஸ் போதைப்பொருள் - பணத்துடன் இருவர் கைது
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பைசல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட இரு வேறு அதிரடிச் சோதனைகளின் போது, 16 கிராம் 310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன், அதனை விற்பனை செய்து பெறப்பட்டதாகக் கருதப்படும் 105,310 ரூபா பணத்துடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின்படி, முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சந்தேக நபர் முச்சக்கரவண்டி ஓட்டுநர்.
பெருமளவு பணம்..
பைசல்நகரில் உள்ள இவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது, இவரது மனைவியின் வாசனைத் திரவியங்களுக்கு (Perfumes) இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், ஐஸ் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த 60,000 ரூபா பணமும் இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு சோதனையின் போது, இரண்டாவது சந்தேக நபர் 6 கிராம் 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் 45,310 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri