உள்ளே X வெளியே நீலக்குருவி: எலான் மஸ்க் வகுக்கும் திட்டம் என்ன..!
டுவிட்டர் சமூக வலைதளத்தின் சின்னத்தை அதன் உரிமையாளர் எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
இந்நிலையில் புதிய சின்னமான ‘X’ உள்ளேயும், பழைய சின்னமான ‘நீலக் குருவி’ வெளியேயும் அமைந்துள்ளது. டுவிட்டரின் சின்னத்தை X என மாற்றியதன் பின்னணியில் பலமான வர்த்தக நுட்பத்தை எலான் மஸ்க் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில், தனது வியாபார மூளையை மஸ்க் தெளிவாக பயன்படுத்தி திட்டமிட்டுள்ளதாகவும் இதன்மூலம் தனது X கார்ப்பரேஷன் சேவைகளை அவர் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
If a good enough X logo is posted tonight, we’ll make go live worldwide tomorrow
— Elon Musk (@elonmusk) July 23, 2023
குறிப்பாக டுவிட்டர், பேபால் (Paypal) நிதி சேவை மற்றும் இன்னும் பிற விடயங்களை ஒரே செயலியில் கொண்டு வருவதுதான் இவரின் திட்டம் என பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார்.
ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, டுவிட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் டுவிட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில், டுவிட்டர் தளத்தின் பிரபலம் வாய்ந்த அடையாளமாக இருந்த நீலக்குருவி சின்னத்தை தற்போது ‘எக்ஸ்’ (X) என மாற்றியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் டோஜ்காயின் (Doge coin) கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை டுவிட்டர் தளத்தின் சின்னமாக மாற்றி இருந்தார். பின்னர் மீண்டும் நீலக் குருவியாக அதனை மாற்றினார்.
இந்தச் சூழலில் டுவிட்டரின் சின்னத்தை நிரந்தரமாக மாற்ற மஸ்க் முடிவு செய்துள்ளர். அது குறித்து ட்வீட்டும் செய்திருந்தார். அதாவது நீலக் குருவிக்கு விடை கொடுப்போம் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
வரும் நாட்களில் ட்விட்டரின் (twitter.com) டொமைனை(Domain) x.com என மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
இதன் கீழ் மஸ்க் உரிமையாளராக உள்ள X கார்ப்பரேஷன் நிறுவன சேவைகளை பயனர்கள் பெறமுடியும் எனவும் குறிப்பாக நிதி சார்ந்த சேவைகளும் இதில் இருக்கும் எனவும் தெரியவருகிறது.