அதிக கடன்சுமையை எதிர்நோக்கும் டுவிட்டர்: எலான் மஸ்க்கின் அடுத்த நகர்வு
டுவிட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்துள்ளதால் நிறுவனம் இன்னும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் வியாபாரம் குறித்து ஆலோசனை வழங்குவதாக வெளியான டுவிட் ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
டுவிட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல டுவிட்டருக்கு அதிக அளவிலான கடன் சுமை இருக்கிறது. வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக டுவிட்டரை லாபப் பாதைக்கு கொண்டுவர வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு விதமான மாற்றங்களை அந்நிறுவனத்தில் கொண்டு வந்துள்ளார்.
முதலில் அந்த நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்களை பணியிலிருந்து நீக்கினார். பின்னர், அதிக அளவில் டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
டுவிட்டரில் பதிவிடும் கருத்துகள் தொடர்பாக மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ஒரு நாளில் இத்தனை டுவிட்களை மட்டும் தான் பயனாளர் பார்க்க முடியும் என டுவிட்டர் சில கட்டுப்பாடுகளை விதித்தது அதன் பயனாளர்களை அதிருப்தியடையச் செய்தது.
டுவிட்டர் நிறுவனம் லாபப் பாதையில் பயணிக்கும் என கடந்த ஏப்ரலில் எலான் மஸ்க் கூறியிருந்தார். அதன் பின், மே மாதத்தில் விளம்பரத் துறையில் அனுபவமிக்க ஒருவரை ட்விட்டருக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தார்.
இந்த நிலையில், டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது டுவிட்டருக்கு சற்று சரிவை கொடுத்துள்ளது எனலாம்.