விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் - தமிழகத்தின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் உருவாகியுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதேவேளை, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஆட்சியமைக்காத சூழலில், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் பதற்றம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிடையில், பா.ம.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் வி.சி.க. ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சி செய்து வரும் நிலையில், மறுபுறம் திமுக மற்றும் அதிமுக ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நிலவும் இந்தத் தொங்கு நிலை முடிவுக்கு வந்து, புதிய அரசு அமையும் வரை தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதே நிலையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் அமைதி காக்குமாறு அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.