வடக்கு - கிழக்கில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மிக கொடூரமானது! சுவிட்சர்லாந்தில் அருட்தந்தை ஆதங்கம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்படாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய அக்கிராசன உரையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் நாட்டில் ஒரு திருப்பம் ஏற்படுவது சத்தியமாகும் என சுவிட்சர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் மில்டன் லோகு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு நெருக்கடிகள் பழக்கமாகி விட்டது
சுவிஸர்லாந்து ஊடகத்திற்கு அருட்தந்தை அவர்கள் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் பொருளாதார நெருக்கடி, ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் எப்போது ஓய்ந்திருந்ததில்லை. இலங்கையில் நிலைமை சீரடைய பிரார்த்தனை செய்து வருகின்றோம்.
எனது பெற்றோர் உட்பட உறவினர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் வசிக்கின்றனர். அங்குள்ள நிலைமையில் அவர்கள் நன்றாக இருக்கின்றனர்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது.
தமிழர்களாகிய நாங்கள் பல சந்தர்ப்பங்களில் இப்படியான நிலைமையை பார்த்துள்ளோம். இதனால், நெருக்கடிகள் எமக்கு பழக்கமாகிவிட்டது.
எனினும் மனித உரிமை மீறல்களை நாங்கள் அனுபவிக்க நேரிட்டது மிக கொடூரமானது. நிலைமை சீரடைய நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம். பிரதானமாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் கொழும்பில் பல ஊடகங்கள் இருக்கின்றன.
அங்கு மனித உரிமைகள் மீறப்படும் போது அதனை உடனடியாக முழு உலகமும் பார்க்க முடியும். கொழும்பில் வாழும் தமிழர்கள் போராட்டங்களில் கலந்துக்கொள்கின்றனர்.
ஏனைய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. மூன்று மாதங்கள் இரவு பகல் பாராது போராட்டங்கள் நடத்தப்பட்டன. இலங்கையில் பல நிச்சயமற்ற நிலைமைகள் காணப்படுகின்றன.
அனைத்தையும் விட பொருளாதார ரீதியான விடயங்கள் மோசமாகி வருவதால் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.எரிபொருள் இல்லாத காரணத்தினால் உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
பொருளாதார நெருக்கடி ஊழல்கள் உட்பட பல விடயங்கள் காரணம்
இந்த நெருக்கடி அதிகரிக்க நாடாளுமன்றம் மட்டும் காரணமல்ல. இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் சுற்றியும் பாரிய ஊழல்கள் நடந்துள்ளன. அண்மைய வருடங்களில் மிகப் பெரிய தவறுகள் நடந்துள்ளன.
அரசாங்கம், சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து பெருந்தொகை பணத்தை கடனாக பெற்றுள்ளது. தற்போது கடனை செலுத்த வேண்டும், ஆனால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.
இவை அனைத்தும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளன. இலங்கையில் போர் நடைபெறாத போதிலும் கொரோனா, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் என்பனவும் இலங்கையின் நெருக்கடிக்கு காரணம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுவிஸர்லாந்தில் நிதி சேகரிக்கின்றோம்
சுவிஸர்லாந்தில் வாழும் கத்தோலிக்க சமூகத்திற்குள் நாங்கள் எமது உறவினர்களுக்கு மற்றும் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக நிதியை சேகரித்து வருகின்றோம்.
உணவு விநியோகத்தை ஒருங்கிணைப்பு செய்ய நாங்கள் தற்போது கரிட்டாஸ் நிறுவனத்துடன் செயற்பட்டு வருகின்றோம். அரிசி உட்பட ஏனைய உணவுகள் ஏற்கனவே நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இலங்கை கத்தேலிக்க ஆயர்கள் மாநாடு அரச தலைவர்களிடம் மாற்றம் கோரி அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. கொழும்பு பேராயர் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்.
உதாரணமாக 2019 ஆம் ஆண்டு தேவாலயங்கள் மீது நடந்த குண்டு தாக்குதல் தொடர்பான விடயத்திற்கு நியாயம் வழங்கப்படாதது தொடர்பாக அவர் மீண்டும் மீண்டும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இதுவரை எவ்விதமான நியாயமும் வழங்கப்படவில்லை. பயங்கரவாத நடவடிக்கை எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதிலும் மாற்றம் தேவை. பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தினால், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படவில்லை.
எனினும் எனக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால், ஒரு திருப்பம் ஏற்படும் எனவும் டக்ளஸ் மில்டன் லோகு தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை டக்ளஸ் மில்டன் லோகு சுவிஸர்லாந்து தமிழ் சமூகத்தின் ஒரு பிரதிநிதி, அவர் 17 பணித்தளங்களில் பணிகளைச் செய்வதுடன், மாதந்தோறும் 24 இடங்களில் உள்ள தேவாலயங்களில் திருப்பலிகளை ஒப்புக்கொடுக்கிறார்.
இலங்கையில் 12 மறைமாவட்டங்கள் உள்ளன. அவற்றில் நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் உள்ளன, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் ஏழு சதவீதத்தில் கத்தோலிக்கர்கள் ஒரு சிறுபான்மையினராக உள்ளனர்.