நாடளாவிய ரீதியில் சுனாமி நினைவுதினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு (Photos)
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 17ஆண்டு நினைவு நாள் இன்று நாடளாவிய ரீதியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் சுகாதார நடைமுறைகளைப் பேணி இன்று சுனாமியினால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இம் மாவட்டத்தில் சுமார் 1800 பேரை பலி கொண்ட நாவலடி, டச்பார், புதுமுத்துவாரம், திருச்செந்தூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளில் மெழுகுதிரி ஏற்றி சமய வழிபாடுகள் இடம்பெற்றன.
சுனாமி தாக்கத்தில் உறவுகளை இழந்தவர்கள் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், பிரதேச சபை உறுப்பினர் சற்குணம், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகள் : ருசாத்
புதுக்குடியிருப்பு
ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள சுனாமி நினைவாலயத்தில் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. காலை 8.00மணிக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் வெளியீடு செய்யப்பட்ட “அலை தந்த சோகம் பாடல்“ இறுவட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசன் கெயார் நிறுவனமும் வன்னிக்குறோஸ் நிறுவனமும் இணைந்து கண்பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவ முகாம் என்பன மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வடமராட்சி கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. பிரதான நிகழ்வு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் குழுவின் தலைவர் வே.தவராசா தலைமையில் இடம்பெற்றது.
இதேபோல் உடுத்துறை பத்தாம் வட்டாரத்தில் சுமார் 50 உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மணற்காட்டுப் பகுதியில் 72 உடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட சவக்காலப் பிட்டியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக மணற்காடு புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுத்தைத் தொடர்ந்து சுனாமி நினைவாலயத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல் வடமராட்சி, புலோலி சூசையப்பர் ஆலயத்தில் உடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக புலோலி சூசையப்பர் ஆலயத்தில் பருத்தித்துறை கோட்ட பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுத்ததையடுத்து உடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் உறவினர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று தாளையடி, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
செய்திகள் : ராகேஷ்
மன்னார்
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் பேசாலை வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மன்னார் மாவட்ட கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனரும், மன்னார் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.ரி.லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் நினைவேந்தல் இடம் பெற்றது.
உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசிய கலைஞர் எஸ்.ஏ.உதயன் சுடர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மீனவர்கள்,வர்த்தகர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்திகள் : ஆஷிக்
களுவாஞ்சிகுடி
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமையப் பெற்றுள்ள சுனாமி நினைவுத் தூபியில் சுனாமியினால் உயிரிழந்தவர்களுக்கு இன்று (26) அஞ்சலி செலுத்தப்பட்டது.
களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மண்முனை தென்எருவிப் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய குருக்கள் மு.அங்குசசர்மா, உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செய்து உயிரிழந்தவர்களுக்கு நினைவு கூரப்பட்டது.
செய்திகள் : ருசாத்
யாழ்ப்பாணம்
யாழ். மாவட்ட செயலகம், மற்றும் அனர்த்த முகாமைத்துவ கிளை அலுவலகத்தின் எற்பாட்டில், ஆழிப்பேரலையின் உயிர்நீத்த உறவினர்களுக்கான 17 ஆவது ஆண்டு நினைவேந்தலுடனான அஞ்சலி நிகழ்வு இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது,
யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக தேசியக்கொடியினை மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் எற்றியதை தொடர்ந்து நினைவேந்தல் அஞ்சலியும் ஆத்மாசாந்திப் பிராத்தனையும் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ். மாவ்ட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர்கள் கலந்துகொண்டு உயிர் நீத்த உறவினர்களுக்கான அகல் தீபவொளி விளக்கெற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது சர்வமத தலைவர்களின் நினைவுச்சுடர்கள் எற்றியும் அவர்களுக்கான ஆத்மா சாந்திவேண்டி பிராத்தனையும் இடம்பெற்றது. இதில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ் முரளிதரன், அனர்த்த முகாமைத்துவ பதவிநிலை அலுவலகர்கள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுப்பூர்வமாகச் சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில், இன்று அதன் 17வது ஆண்டு நினை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மட்டக்களப்பு திருச்செந்தூர் பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
திருச்செந்தூரில் சுனாமி பேரனர்த்தம் காரணமாக இப்பகுதியில் 243 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே நிகழ்வு உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழிபாடுகள் நடாத்தப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுத்தூபியில் சுடர் ஏற்றப்பட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி: குமார்
உடுத்துறை
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணம் - வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.
உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளைப் படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.
கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாகப் பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கோகுலன்
மலையகம்
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையகமக்கள் தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாகக் காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.
இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.
ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் ஏற்பாட்டில் ஹட்டன்
மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற
அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர
வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என
அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
செய்தி: திருமால்
வவுனியா
வவுனியா - பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 17 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு சுனாமி நினைவுத்தூபி முன்பாக இன்று (26) காலை இடம்பெற்றது.
பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு கழக மைதான வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது உயிரிழந்தவர்களிற்கு 9.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டன.
நிகழ்வில் மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உபதவிசாளர் சு.குமாரசாமி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலய நிர்வாகனத்தினர், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி: திலீபன்
முல்லைத்தீவு
ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்நல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திலும், கள்ளப்பாடு மைதானத்திலும், புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்திலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
உயிரிழந்தவர்களின் உறவுகள் இன்றைய தினம் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுப்பூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.
அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மத வழிபாடுகளும்
இடம்பெற்றிருந்தன.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மத தலைவர்கள்
உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: குமணன்

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
