யாழ். கல்வியங்காட்டுப் பகுதியில் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி (Photos)
யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டிலிருந்தவரை கட்டி வைத்து கத்தி காட்டி நகைகளைக் கொள்ளையிட முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (26.08.2023) அதிகாலை 2 மணிளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு - பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள், வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டி வைத்து கழுத்தில் கத்தினை வைத்து எங்கே நகையுள்ளது என மிரட்டி அரை மணி நேரமாக குறித்த கும்பல் அடாவடி புரிந்துள்ளது.
குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணை
எனினும், குறித்த நபர் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக அச்சுறுத்திய கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெரிய கத்தியினையும் விட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே போன்று நேற்று முன்தினம் கல்வியங்காடு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்தி காட்டி அச்சுறுத்தி பணம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |