முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டும்: எரான் விக்ரமரட்ன (Video)
இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வரவேண்டுமானால், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (22.02.2023) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. எனினும் வர்த்தக சமூகத்தின் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும் என்று மேலும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், நாட்டில் தொடர்ந்தும் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. முன்னதாக ஷாப்டரின் மரணம் கழுத்து நெரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது என்று சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.
எனினும் அதே சட்ட வைத்திய அதிகாரி, தமது இரண்டாவது அறிக்கையில் தினேஷ் ஷாப்டரின் மரணம், தற்கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு சட்ட வைத்திய அறிக்கைகளையும் வெளியிட்ட சட்ட வைத்திய அதிகாரி, ஏற்கனவே சேவையிலிருந்து தடை செய்யப்பட்டவர் என்று இலங்கை வைத்திய சேவை சங்கம் தெரிவித்துள்ளதாக எரான் விக்ரமரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில், நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலையிட்டு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் எரான் விக்ரமரட்ன
தெரிவித்துள்ளார்.




