புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தை.. ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில், "இந்த அழைப்பின் தலைப்புக்கள், வாரத்திற்கு சராசரியாக 5000க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரேனிய வீரர்களைக் கொல்லும் இரத்தக் குளியலை நிறுத்துவதும், வர்த்தகம் செய்வதும் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை துருக்கியில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
நேரடி பேச்சுவார்த்தை
மூன்று ஆண்டுகளில் இரு நாடுகளும் எந்த மட்டத்திலும் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
தானும் புடினும் நேரடியாகப் பேசும் வரை அமைதிப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை என்று ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார்.
"நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நானும் அவரும் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை எதுவும் நடக்கப் போவதில்லை," என்று ட்ரம்ப் இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
புடினுடன் பேசிய பிறகு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோவின் பல்வேறு உறுப்பினர்களுடன் பேச திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
