அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டை அடுத்து இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை!!
அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க, உள்நாட்டில் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்காக உள்நாட்டு பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு வரி விதிக்கும் போது அதனை எதிர்ப்பதற்கு வழிகள் இல்லை. இதனால் அதனை இறுதியில் ஏற்றுக் கொள்ள தான் நேரிடும்.
உள்நாட்டு ஏற்றுமதி
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இறுதியில் இது தான் நடக்கும் என்பதனை தவிர்க்க முடியாது.
இவ்வாறான சூழ்நிலையில் உள்நாட்டில் ஏற்றுமதித்துறையை வலுப்படுத்துவதற்கு என்ன வழிமுறைகள் உள்ளதென்பதனை அரசாங்கம் ஆராய வேண்டும்.
போட்டித்தன்மை
முதலீட்டுகளை அதிகரிக்க அதனை ஈர்க்க கூடிய திட்டங்களை நாட்டில் முன்னெடுக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
அமெரிக்காவின் அல்லது வேறு எந்த நாட்டின் அனுதாபத்தை நம்பி நாட்டின் ஏற்றுமதித் துறையை உருவாக்குவதற்கு பதிலாக, அதைத் தாண்டி போட்டித்தன்மையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பேராசிரியர் பிரியங்க துனுசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.