கனேடிய பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த போகும் ட்ரம்பின் வெற்றி
அமெரிக்காவின் (US) புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வெற்றி கனேடிய (Canada) பொருளாதாரத்தில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவில் பணவீக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, அமெரிக்க வட்டி விகித கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு, அதன் தாக்கம் கனேடிய வட்டி விகிதத்தில் மற்றும் கனேடிய டொலரின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும், குறைந்த வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறையை எளிமைப்படுத்துவதாகவும் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரம்
இந்நடவடிக்கை, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் குறைந்த பட்சமாக 3வீதம் வரையான பணவீக்கத்தை உயர்த்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதனால், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் ஏற்படும் (Federal Reserve interest rate) குறைக்கும் செயற்பாடானது மந்தநிலையை அடையும்.
அதேவேளை, கனடா அதன் வட்டி விகிதத்தைக் குறைக்கும் போது அமெரிக்காவின் வட்டி விகித கொள்கையை கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் உருவாகுவதுடன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது கனேடிய டொலரின் மதிப்பு குறைவதால், கனடாவுக்கு தேவையான இறக்குமதி பொருட்கள் விலை உயர்வடையும்.
இத்தகைய நிலை உருவானால், கனேடிய வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டு, கனேடிய டொலரின் மதிப்பு அமெரிக்காவின் பணமதிப்பில் 70 சென்டுக்கு கீழ் குறைவடைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
you may like this