ஈரானிலிருந்து விரைவில் வெளியேறுவோம்: நேட்டோ அமைப்பிலிருந்து விலகவும் திட்டம்- ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரானுடனான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை எட்டிவிட்டதாகவும், விரைவில் அந்நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(1) புதன்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய உரையை நிகழ்த்துவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகப் பேசிய அவர், "ஈரானால் இனி அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியாது என்ற நிலையை அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் உறுதிசெய்துள்ளன.
அமெரிக்காவின் நோக்கங்கள்
எனவே, நாங்கள் மிக விரைவாக அங்கிருந்து வெளியேறுவோம்; தேவைப்பட்டால் குறிப்பிட்ட இலக்குகளை மட்டும் தாக்கும் 'ஸ்பாட் ஹிட்ஸ்' (Spot hits) நடவடிக்கைகளுக்காக மீண்டும் வருவோம்" என்று கூறினார்.

அதே நேரத்தில், ஈரானில் அமெரிக்காவின் நோக்கங்களுக்குப் போதுமான ஆதரவை வழங்காத 'நேட்டோ' (NATO) கூட்டணி நாடுகளின் மீது தனது கடும் அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
"நேட்டோ நாடுகளின் ஒத்துழைப்பின்மை எனக்கு மிகுந்த வெறுப்பை அளிக்கிறது" என்று கூறிய அவர், அமெரிக்காவை அந்த அமைப்பிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றுவது குறித்து "நிச்சயமாக" ஆலோசித்து வருவதாகவும் அதிரடியாகத் தெரிவித்தார்.
ட்ரம்ப்பின் அறிவிப்பு
ஈரானின் அணு ஆயுதத் திறனை அமெரிக்கா முடக்கிவிட்டதாகக் கூறிய ட்ரம்ப், படைகளைத் திரும்பப் பெறுவதற்கான துல்லியமான காலக்கெடுவை அறிவிக்கவில்லை என்றாலும், அது மிக விரைவில் நடக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஐரோப்பியப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகினால், அது உலகளாவிய பாதுகாப்புச் சமநிலையை சீர்குலைக்கும் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு ட்ரம்ப் நிகழ்த்தவுள்ள சிறப்பு உரையில் இது குறித்த விரிவான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.