திருகோணமலையில் தபால் ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம்
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியிலுள்ள தபால் ஊழியர்கள் 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று (17) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு
இதன் காரணமாக தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெற வந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக கவலை தெரிவித்தனர்.
கிண்ணியா
கிண்ணியா பிரதேச தபாற்காரர்களும், உப தபால் அதிபர்களும் இன்று (17) அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதனால், முழு தபாலகங்களின் பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
கிண்ணியா பிரதான தபாலம் உட்பட, ஐந்து உப தபாலகங்களின் பணிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தன. ஆலங்கேணி, அண்ணல்நகர், மாஞ்சோலைச்சேனை, நடுத்தீவு மற்றும் மகாமாறு ஆகிய உப தபாலகங்கள் மூடப்பட்டிருந்ததால், அங்கு, இன்றைய தபால் சேவைகள் எதுவும் நடைபெறவில்லை.
இதேவேளை, கிண்ணியா பிரதான தபாலத்தில் அலுவலக ஊழியர்கள் பணிக்கு சமூகமளித்திருந்தனர்.
எனினும், தபால்காரர்கள் பணிக்கு சமூகமளிக்காமையினால், கடித விநியோக சேவைகள் எதுவும் நடைபெறவில்லை என தபால் அதிபர் தெரிவித்தார்.
அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெற வந்தோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |