திருகோணமலையில் எதிர்காலத்தில் தமிழர்கள் வாழக்கூடிய எந்த சந்தர்ப்பமும் இல்லை: தவராசா கலையரசன்
"தமிழர்களின் இதயமாக இருக்கின்ற திருகோணமலையில் எதிர்காலத்தில் தமிழர்கள் வாழக்கூடிய எந்த சந்தர்ப்பமும் இல்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை வளத்தாப்பிட்டியில் இடம்பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒழுக்க விழுமியமுள்ள நல்ல இளைஞர்களை உருவாக்க வேண்டும்
“எமது அம்பாறை மாவட்டத்தைப் பொருத்த மட்டில் தமிழர்கள் சார்ந்த பல பிரச்சினைகள் உண்டு. தமிழர்கள் என்ற காரணத்தினால் எமது எல்லைக் கிராமங்கள், பல திட்டமிட்டு அழிக்கப்பட்டன.
அதன் விளைவுகளை நாங்கள் நாளுக்கு நாள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். மிகப் பெரியதொரு பின்னடைவின் பின்னர் தற்போது தான் எமது சமூகத்தில கல்வியாளர்கள் பலர் உருவாக்கப்பட்டு வருகின்றார்கள்.
கடந்த காலங்களில் எமது தமிழர் பிரதேசங்களிலே மௌனமான இனஅழிப்பு நடந்தேறியது. எமது மக்கள் எதற்குமே வெளியில் வரமுடியாத சூழல் இருந்தது.
அவ்வாறான விடயங்கள் இன்று முள்ளிவாய்க்காலின் பின்னர் வெளியில் வந்தாலும் மேலும் பல விடயங்கள் அட்டூலியங்கள் எல்லாம் வெளிவராமலேயே இருக்கின்றன.
இன்றைய நிலையில் எமது சமூகத்திலே வெறுமனே கல்வியை மாத்திரம் நாங்கள் வளர்த்துவிட வேண்டியவர்களாக இருந்துவிட முடியாது.
எங்களுடைய சமூகத்தில ஒழுக்க விழுமியமுள்ள நல்ல இளைஞர்களை உருவாக்க வேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். தற்போதைய காலத்தில் மாணவர்கள் அதிபர் ஆசிரியர்களை மதிக்காமல் நடக்கின்ற சம்பவங்கள் பலவற்றைக் கண்டும் கேட்டும் இருக்கின்றோம்.
இவ்வாறே சென்றால் இந்த சமூகம் எதிர்காலத்தில் எவ்வாறு வாழப் போகின்றது என்கிற கேள்வி எம்முள் எழுகின்றது.
கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் முதன்மையான இனமாக இருந்தவர்கள் நாங்கள் ஆனால் இன்று இரண்டாம் நிலைக்குச் செல்லக் கூடிய ஒரு சூழல் வருகின்றது.
திருக்கோணமலையில் எதிர்காலத்தில் தமிழர்கள் வாழக்கூடிய எந்த சந்தர்ப்பமும் இல்லை
தமிழர்களின் இதயமாக இருக்கின்ற திருகோணமலையிலே எதிர்காலத்தில் தமிழர்கள் வாழக்கூடிய எந்த சந்தர்ப்பமும் இல்லை. திருக்கோணேஸ்வரார் ஆலயத்தை அவர்கள் முற்றுகையிடும் நிலையே இருக்கின்றது.
அது மாத்திரமல்ல வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற பாலமாக இருக்கின்ற திருகோணமலை முல்லைத்தீவு எல்லைப் பகுதியைக் கூட ஆக்கிரமித்து எமது இருப்பை இல்லாமல் செய்கின்ற விடயங்களைச் சிங்களப் பேரினவாதம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அம்பாறையிலே தமிழர்கள் இருந்திருக்கவில்லையா, அங்கு ஒரு மகாவித்தியாலயமும், ஆலயமும் எவ்வாறு வந்தது? ஆனால் தற்போது அங்கு மாணவர்களும் இல்லை, தமிழர்களும் இல்லை. இந்த அடிப்படைகளில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கின்ற நாங்கள் எமது மக்களின் இருப்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும் செயற்படுகின்றோம்.
தற்போது இந்த நாடு போகின்ற போக்கிற்கு எவ்விதமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளக்கூடிய சூழல் இல்லை. 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வந்த ஜனாதிபதி அவர்கள் அதே மக்களால் துரத்தியடிக்கப்பட்டதன் பிற்பாடும் தற்போது மீண்டும் அவருக்கு அரசியல் ஆசை வந்திருக்கின்றது.
இந்த நாட்டை தற்போது இருப்பதை விட மேலும் நாசம் செய்யக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தப் போகின்றார். இதுதான் இந்த நாட்டிலே நடைபெறப் போகின்றது” என்று தெரிவித்துள்ளார்.