திருகோணமலை எண்ணெய் குத விவகாரம்! - மறுப்பு வெளியிட்டுள்ள இந்தியா
இலங்கையுடனான திருகோணமலை எரிபொருள் குத ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற கூற்றை இந்தியா மறுத்துள்ளது.
திருகோணமலையில் அமைந்துள்ள எரிபொருள் குதப் பண்ணையை கூட்டாக அபிவிருத்தி செய்வது மற்றும் இயக்குவது குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு ரத்துச்செய்யப்பட்டது என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
2021 பெப்ரவரி 17 அன்று ஒரு நிகழ்வில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில் கூறிய கருத்துக்களை இலங்கையின் சில ஊடகங்கள், முறையாக வெளிப்படுத்தவில்லை என்று உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையின் எரிசக்தி அமைச்சர் தாமே இந்த விஷயத்தை இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2017 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட தற்போதுள்ள இருதரப்பு புரிதல்களுக்கு ஏற்ப, கூட்டாக குறித்த எரிபொருள் குதத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இயக்குவதற்கும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகளை ஆராய இரு அரசாங்கங்களும் ஆலோசனை நடத்தியதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் முறையான கலந்துரையாடல்களையும், பரஸ்பர நன்மைக்காக அவற்றின் முடிவுகளை விரைவாக செயற்;படுத்தவும் இந்தியா எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.



