நிரந்தர நியமனம் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பட்டதாரிகள்
பாடசாலைகளில் நீண்டகாலமாக ஆசிரியர் பணிகளை முன்னெடுத்து வரும் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருகோணமலை மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய திணைக்களங்களுக்கு மாற்ற முயற்சிகள் எடுப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த முறைப்பாட்டை, திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து இன்று(30.12.2025) கையளித்துள்ளனர்.
நிரந்தர நியமனம் வேண்டும்
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள், "நாங்கள் பல ஆண்டுகளாக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பி, அர்ப்பணிப்புடன் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

எமது சேவையை கருத்திற் கொண்டு எமக்கு நிரந்தரமாக ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும்.
இதை தவிர்த்து, எம்மை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்ற முயற்சிப்பது எமது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் " என குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கை தொழில் பாதுகாப்பு மற்றும் சமத்துவ உரிமைகளுக்கு முரணானது என்றும், கல்வித் துறையில் தொடர்ந்தும் பணியாற்றத் தமக்கு இருக்கும் விருப்பத்தை அதிகாரிகள் புறக்கணிப்பது பெரும் அநீதி என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் அரசாங்கமும் கல்வித் திணைக்களமும் உரிய தீர்வினை வழங்கத் தவறினால், தங்களது உரிமைகளை வென்றெடுக்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும்.
அதே சமயம், ஜனநாயக ரீதியிலான பாரிய போராட்டங்களிலும் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு உரிய விசாரணைகளை முன்னெடுத்து தமக்கு நீதி பெற்றுத் தரும் என எதிர்பார்ப்பதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.