நாட்டில் புதிதாக களமிறங்கும் அரசியல் கட்சிகள்
இலங்கையில் புதிதாக ஐந்து அரசியல் கட்சிகள் அரசியலில் களமிறங்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியல் கட்சிகள் ஐந்து பதிவு செய்ய தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக கடந்த நாட்களில் தேர்தல் ஆணைக்குழு நேர்முகத் தேர்வுகளை நடத்தியுள்ளது.
அதன்படி, இம்முறை மொத்தமாக 86 அரசியல் கட்சிகள் பதிவு பெற விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தன.
83 அரசியல் கட்சிகள் பதிவு
இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் பின்னர், பதிவு செய்ய தேவையான தகுதிகளை பூர்த்தி செய்ததாக அரசியல் கட்சிகள் ஐந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஐந்து புதிய அரசியல் கட்சிகளின் பெயர்கள், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், தற்போது தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆகும். அவற்றில் எட்டு அரசியல் கட்சிகள் செயலற்ற நிலையில் உள்ளதாகவும், அவற்றிற்கு செயலாளர் இல்லாததே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 83 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றில் மூன்று அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.