திருகோணமலை மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம்
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் 2024ஆம் ஆண்டு 4ஆம் காலாண்டுக்கான மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டமானது, நேற்று (19) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கடந்த மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
தீர்வுக்கான நடவடிக்கைகள்
மேலும், பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் ஊடாக இனங்காணப்பட்ட, பிரதேசத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கல்வி தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைத்து விரைவாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, CERI நிறுவனத்தினால் மகளிர், சிறுவர் பிரிவில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் தொடர்பான விபரங்களை காட்சிப்படுத்த 12 விபரப்பலகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், துறைசார் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |