திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி காப்பு விரதம்
திருகோணமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி காப்பு விரதமானது நேற்று (01) ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்களின் தலைமையில் பக்தர்களின் பேராதரவுடன் இடம்பெற்றது.
இதன்போது ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் அம்பிகையின் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு அருளை பெற்றுக்கொண்டனர்.
இருபத்தொரு நாட்கள்
இந்துக்களின் மிக முக்கியமான விரதங்களில் கேதார கெளரி விரதமும் ஒன்றாகும்.
இவ்விரதம் புரட்டாதி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது.
இருபத்தொரு நாட்களைக் கொண்ட இந்த விரதமானது, விரதத்தை அனுஷ்டிப்போர் சிவன் மற்றும் சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.
இவ் விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர்.
மங்களகரமான வாழ்க்கை
மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர்.
மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கின்றனர்.
“கேதாரம்” என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய “கௌரி’' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப்பெயர் உண்டாயிற்று.
சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது பராசக்தி எனப் போற்றப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |