சீரற்ற கால நிலையால் திருகோணமலையில் 7000ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..
கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக மாவட்டத்தின் ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் 2673 குடும்பங்களைச் சேர்ந்த, 7368 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. H. G. M. ஹேமந்தகுமார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(27) மாலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் தகவல்களை வெளியிட்டார்.
அதிக பாதிப்புக்குள்ளான பிரதேசங்கள். மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கிய தகவலின்படி, பிரதேச செயலகப் பிரிவுகளிலான பாதிப்பு விபரம் பின்வருமாறு:
நவம்பர் 27 பகல் வரையான காலப் பகுதிக்குள், கிண்ணியா: 1600 குடும்பங்கள் – 3800 பேர் மூதூர்: 750 குடும்பங்கள் – 2485 பேர் தம்பலாகமம்: 140 குடும்பங்கள் – 436 பேர் சேருவில: 104 குடும்பங்கள் – 397 பேர் பதவிசிறிபுர: 42 குடும்பங்கள் – 131 பேர் பட்டணமும் சூழலும்: 8 குடும்பங்கள் – 29 பேர் மொரவெவ: 9 குடும்பங்கள் – 28 பேர் கோமரங்கடவெல: 5 குடும்பங்கள் – 22 பேர் வெருகல்: 15 குடும்பங்கள் – 40 பேர்.
சீரற்ற கால நிலை
தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களில் தம்பலாகமம் பிரதேசத்தைச் சேர்ந்த 46 பேர் (14 பெண்களும், 42 ஆண்களும்) ஆதி கோணேஸ்வரா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 433 குடும்பங்களைச் சேர்ந்த 1545 பேர் தங்களது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக மாவட்டத்தில் மொத்தமாக 49 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணங்களை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதோடு, மக்களின் பாதுகாப்பு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய எச்சரிக்கைகள் மற்றும் பொதுச் சேதங்கள் - மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், நீர் வடிந்து ஓடக்கூடிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
மாவட்டத்தில் வீதிகள், கடற்கரைப் பூங்காக்கள், பாலங்கள், கால்வாய்கள் போன்ற பொது உட்கட்டமைப்புகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார்.
கடற்கரை ஓரமாக வசிப்பவர்கள் அவதானமாக இருப்பதோடு, தங்களின் பாதுகாப்புக்காக இரவு நேரங்களில் உறவினர்களின் வீடுகளில் தங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசாங்கத்தின் நிவாரண மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் W. H. G. M. ஹேமந்தகுமார தெரிவித்தார்.
மேலதிக தகவல்- ரொசான்





