ஏழு முக்கிய குற்றங்களுக்கான விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
ஏழு முக்கிய குற்ற வழக்குகளைத் தவிர, கடந்த கால குற்றங்கள் அனைத்தையும் விசாரித்து, அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் இன்று உறுதியளித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத், கடந்த கால குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிதாக விசாரணைகளை ஆரம்பிக்காது என தெரிவித்துள்ளார்.
ஏழு முக்கிய குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் விளக்கமாக அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.
விசாரணை
மத்திய வங்கி பிணைமுறி மோசடி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.பி. சிவராம், லலித் குமார் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போனது, வர்த்தகர் தினேஸ் சாஃப்டர் கொலை, வெலிகம று15 ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்ற சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
அல்லது விசாரணை முடிவடைய குறைந்தபட்ச விடயங்களே தேவைப்படுவதாக அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.
எனவே, அந்த விசாரணைகளை விரைவுப்படுத்தும் உத்தரவுகளே தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவு இந்த ஏழு வழக்குகளுக்கு மட்டும் அர்த்தமல்ல என்று கூறிய அமைச்சரவைப் பேச்சாளர், கடந்த காலங்களில் பதிவாகிய பொருளாதாரக் குற்றங்கள், கொலைகள், ஊடகவியலாளர்கள் காணாமல் போன சம்பவங்கள் போன்ற அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன், ஊடகவியலாளர்; லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் மரணம், கேலிச்சித்திர செய்தியாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எக்னெலிகொட வழக்கு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன எனக் கூறியுள்ளார்.
அத்துடன், நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் புதிய விசாரணையைத் தொடங்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால், அதனையும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முறையான முறையான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து, விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளியிடும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |