அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15ஆம் திகதி வரை பயணத்தடை
அந்த வகையில் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் தீர்மானித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனால் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை ஆராயும் போதே பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளின் ஆட்சேபனை
இதேவேளை அஜித் நிவாட் கப்ரால் இன்று நீதிமன்றில் முன்னிலையான போது, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்த முடியாது என ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.
இந்த நிலையில், முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்து மூலமான வாக்குமூலங்களை டிசம்பர் 15ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டுள்ளார்.
