மூன்றாம் பாலினத்தவர்களின் நடைபயண பேரணியில் பங்கேற்ற கனேடிய உயர்ஸ்தானிகர்
யாழில் (Jaffna) மூன்றாம் பாலினத்தவர்களால் சமத்துவம், சமூக நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட நடைபயண பேரணியில் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் பங்கேற்றுள்ளார்.
குறித்த நடைபயணமானது, இன்று (08.06.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மூன்றாம் பாலினத்தவர்கள், சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியன தமக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலரின் ஆதரவு
இந்நிலையில், குறித்த கோரிக்கைகளுக்கு அமைய பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு நடைபயண பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பமான இந்த நடைபயணம், முதலில் சத்திரச் சந்தியை நோக்கி இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, நபண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, பொது நூலகம் முன்பாக நிறைவு பெற்றுள்ளது.
மேலும், இந்த நடைபயணத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் உட்பட தூதரக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நுவரெலியா
அதேவேளை, பெண்கள் உரிமை, திருநங்கைகளுக்கு சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் ஒன்று நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பெண்கள் உடலியல், உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள், பெண்களின் சாதனைகள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல விழிப்புணர்வு
விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், குறித்த நிகழ்வில் அதிகமான
மூன்றாம் பாலினத்தவர்களும் இணைந்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமூகத்தில் சம
உரிமை வழங்க வேண்டும் என தெரிவித்து பொது மக்களுக்கு தெளிவூட்டும்
பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |