ரணிலின் விஜயத்திற்கு முன்னதாக முன்னேற்றக்கூடிய விடயங்கள் தொடர்பில் கவனம்! இந்திய வெளிவிவகார செயலாளர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, இலங்கைத் தலைமை மற்றும் வெளிவிவகார அமைச்சுடனான தனது கலந்துரையாடல்களின் போது இரண்டு நாடுகளின் உறவில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கொழும்பு சந்திப்பில் பேசப்பட்ட விடயம்
ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்திற்கு முன்னதாக முன்னேற்றக்கூடிய பங்காளித்துவத்தின் முக்கிய பகுதிகள், இலங்கைத் தலைமையின் முன்னுரிமைகள் போன்றவற்றை பற்றி கொழும்பு சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த 14 - 16 மாதங்களில் இலங்கை கடந்து வந்த பல்வேறு சவால்களில் இந்தியா சிறப்பாக பணியாற்றியுள்ளதுடன் ஒத்துழைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே இந்தியாவில் அவருக்கு மிகவும் அன்பான வரவேற்பு காத்திருக்கிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் ஜூலை 20 மற்றும் 21ஆம் திகதிகளில் இருதரப்பு கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |